×

விடிய, விடிய கொட்டித் தீர்த்து மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அச்சுறுத்திய அடைமழை

* ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மதுரை: மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று பிற்பகலுக்கு மேல் தொடங்கிய இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. மதுரை மாவட்டம்: மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இம்மாவட்டத்தில் மேலும், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது, காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால், மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி, வராக ஆறு என அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகளில் மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. தேனி அருகே சுக்குவாடன்பட்டியில் உள்ள கண்மாய் நிரம்பி அருகே உள்ள மணி நகர் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. போடி மெட்டு சாலையில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தேனியில் இருந்து போடி மெட்டு வழியாக செல்லும் அனைத்து பேருந்து சேவைகளும், வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வராக நதியில் வெள்ளப்பெருக்கு…
பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் கல்லாறு, செழும்பாறு, கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும்நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வராக நதி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கும்பக்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷாஅஜித் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் நேற்று மாலை தொடங்கிய மழை தொடர்ந்து விடிய விடிய பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவ மாணவிகளின் நலன் கருதி, பாதுகாப்பு கருதி கொடைக்கானல் தாலுகாவை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, பழநியில் கனமழை கொட்டித் தீர்த்தது. கண்மாய்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணை, கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகின்றன. சிவகாசி நகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 24 அடி உயரமுள்ள வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 20 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் அணையிலிருந்து 6,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோட்டைப்பட்டி, விஜயகரிசல்குளம், சேதுராமலிங்காபுரம் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை கண்மாய் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் நிறுத்தம்
தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்செந்தூர் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. கடலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 2 மணி முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை வரை ராமேஸ்வரத்தில் 4 செமீ மழை செய்துள்ளது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுடன் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

பாம்பன் மீனவர்களும் இரண்டு நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், காரையூர், சேரான்கோட்டை, முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, ஓலைக்குடா, வடகாடு, தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் குந்துகால் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் மூன்று நாட்களாக வீடுகளில் முடங்கியுள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

சதுரகிரியில் வெள்ளத்தில் சிக்கிய 22 பக்தர்கள் பத்திரமாக மீட்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, நேற்று சதுரகிரி கோயிலுக்கு சென்று திரும்பி வரும்போது, வெள்ளத்தில் சிக்கிய 22 பக்தர்களை தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசார் இன்று காலை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்கிறது. இந்த நிலையில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி, நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 22 பேர் தரிசனம் முடிந்து மதிய வேளையில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, எலும்பு ஓடை உள்ளிட்ட ஓடைகளில் மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கோயிலில் இருந்து இறங்கி வந்த பக்தர்கள் சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தினர். இந்நிலையில், வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோர் இன்று காலை சங்கிலிப் பாறை ஓடைப்பகுதிக்குச் சென்று 22 பக்தர்களையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மேலும், கோயில் பகுதியில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வரவேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்; நோயாளிகள் அவதி
நாமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பகல் முழுவதும் மழை பெய்தது. இந்நிலையில், நேற்று இரவு விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த 10க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் மரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் ராமேஸ்வரம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி, வாலி நோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கமுதியில் 129.மி.மீ, கடலாடியில் 105 மி.மீ, ராமநாதபுரத்தில் 104 மி.மீ, குறைந்தபட்சமாக பள்ளமோர்க்குளத்தில் 9.50 மி.மீ என மாவட்டத்தில் 994.36 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வாய்க்கால் கரை உடைந்து 200 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு
தேவாரம்: காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக விடிய விடிய மழை பெய்து வருகிறது. உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பன்னிமுட்டி வாய்க்கால் கரை உடைந்தது வயலில் தண்ணீர் புகுந்தது. இதனால், கோகிலாபுரத்தில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த இரண்டாம் போக நெல்பயிர்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் கூடலூர், போடி, கம்பம், பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள கண்மாய், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பாங்கான மேகமலை, ஹைவேவிஸ் பகுதியிலும் மழை கொட்டியது.

The post விடிய, விடிய கொட்டித் தீர்த்து மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களை அச்சுறுத்திய அடைமழை appeared first on Dinakaran.

Tags : Vidiya ,Vidiya Kottithirtu ,Madurai ,
× RELATED திருச்சி ராம்ஜிநகர் காவல்...